4 இடங்களில் ரூ.400 கோடியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் மத்திய மந்திரி அறிவிப்பு

4 இடங்களில் ரூ.400 கோடியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் கட்டப்படும் என்று மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்து உள்ளார்.
4 இடங்களில் ரூ.400 கோடியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் மத்திய மந்திரி அறிவிப்பு
Published on

சென்னை,

கருத்தரங்கம்


மத்திய தொழிலாளர்-வேலைவாய்ப்பு துறை சார்பில் தென் மாநில மண்டல கருத்தரங்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைந்த பட்ச ஊதியம்


தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்துக்கான சட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 300 ரூபாயில் இருந்து 364 ரூபாயாகவும், விவசாயம் சாராத தொழிலாளர்களுக்கு 350 ரூபாயில் இருந்து 579 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரசவ கால விடுமுறை 17 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர் நல சட்டம் மாற்றி அமைக்கப்படும்.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள்


தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 இடங்களில் தலா 100 படுக்கை அறைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் 2 ஆண்டுகளுக்குள் கட்டப்படும். இதற்காக தோராயமாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

தாம்பரம், திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஆம்பூர், ராஜபாளையம், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய இடங்களில் தலா 30 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளாக மேம்படுத்தப்படும். ஆஸ்பத்திரி கட்டுவதற்கான நிலத்தை தமிழக அரசு ஏற்கனவே வழங்கிவிட்டது. 1500 இ.எஸ்.ஐ. மருத்தகங்கள் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 400 மருந்தகங்கள் 6 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்படும். சென்னை, வேலூர், கோவை ஆகிய இடங்களில் தேசிய தொழில் வழிகாட்டி சேவை மையங்கள் அமைக்கப்படும்.

வேலைவாய்ப்பு குறைந்ததா?


பண மாற்ற நடவடிக்கையால் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாக எந்தவித ஆதாரங்களும் வரவில்லை. டெபிட்/ கிரெடிட் கார்டு மூலம் இணையதள பண பரிவர்த்தனை குறித்து அறியாத தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தெலுங்கானா தொழிலாளர் அமைச்சர் நைனி நரசிம்கா ரெட்டி, மத்திய தொழிலாளர்-வேலைவாய்ப்பு துறை செயலாளர் எம்.சத்தியாவதி, இணை செயலாளர் மணிஷ் குமார் குப்தா, மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையர் வி.பி.ஜாய் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com