கட்டண வசூல் நடவடிக்கை: யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை பயன்பாடு குறையும் அபாயம்

டீக்கடை முதல் நகைக்கடை வரை யு.பி.ஜ. பணப்பரிவர்த்தனை உள்ளது.
கட்டண வசூல் நடவடிக்கை: யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை பயன்பாடு குறையும் அபாயம்
Published on: 

சென்னை,

யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல் கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து பகுதிகளிலும் யு.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இத்தகைய பணப்பரிவர்த்தனை மூலம் சில்லறை பிரச்சினைக்கு முற்றிலும் தீர்வு காணப்பட்டது.

ரூபாயை கையில் எடுத்து செல்லும் தேவை இல்லாத நிலைய ஏற்பட்டது. டீக்கடை முதல் நகைக்கடை வரை யு.பி.ஜ. பணப்பரிவர்த்தனை உள்ளது. இவ்வாறு ரூபாய் நோட்டுகளை மறக்கும் வகையில் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை தற்போது வியாபாரிகள், மக்களிடையே பிரபலமாகி உள்ளது.

இந்த நிலையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் குறிப்பிட்ட வியாபார யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற 15-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் கவலை

எனினும், அனைத்து யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது. தனிநபர் ஒருவர் மற்றொரு நபருக்கு அனுப்பும் பணத்துக்கு கட்டணம் இல்லை. ரூ.2 ஆயிரம் வரை நடைபெறும் சிறு வியாபாரிகளின் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைக ளுக்கும் கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ஒருவர் யு.பி.ஐ. மூலம் வாங்கினால் 0.4 சதவீத அடிப்படையில் வியாபாரியிடம் இருந்து சுமார் ரூ.12 கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது துணிக்கடைகள், மின்சாதன கடைகள், நகைக்கடைகள், பர்னிச்சர் கடைகள் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வாடிக்கையாளர்கள் யு.பி.ஐ. மூலம் பெரிய தொகைகளை செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் பரிவர்த்தனைக்கு ஏற்படும் கட்டணம், மாத இறுதியில் வியாபாரிகளுக்கு கூடுதல் செலவாக மாறும் என்று வியாபாரிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

பணப்பரிவர்த்தனை அதிகரிக்குமா?

மேலும் வாடிக்கையாளர்களிடம் இந்த கட்டணத்தை நேரடியாக வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அந்த செலவை வியாபாரிகளே ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. யு.பி.ஐ. கட்டணத்தை வாடிக்கை யாளர்களிடம் நேரடியாக வசூலிக்கக்கூடாது என்றாலும், வியாபாரிகளின் செலவு அதிகரிப்பதால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், யு.பி.ஐ. பயன்பாடு குறைந்து மீண்டும் ரொக்கப் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் சுமை

யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

யு.பி.ஐ. தற்போது வியாபாரத்தில் தவிர்க்க முடியாத பணப்பரிவர்த்தனை முறையாக உள்ளது. சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லாதது வரவேற்கத்தக்கது. ஆனால் அதிக தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்கு வியாபாரிகள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

மத்திய அரசு யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு 0.4 சதவீத சேவை கட்டணத்தை வியாபாரிகள் தான் செலுத்த வேண்டும் என்று கூறினாலும், வியாபாரிகள் எப்படி வசூலிப்பார்கள் என்பது அரசுக்கு தெரியும். இது விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்யும். எனவே கட் டணம் வசூலிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com