சாலையில் கிடந்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்: நேர்மைக்கு கிடைத்த பரிசு..!


கிளாராவை குடும்பத்துடன் வரவழைத்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

சென்னை

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்ப்பவர் கிளாரா. இவர் நேற்று முன்தினம் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் 1 பவுன் தங்கச் சங்கிலி கிடப்பதை பார்த்தார். தங்கம் இப்போது விற்கும் விலைக்கு அதை அவர் எடுத்துச் சென்றிருந்தால், சில மாத பணத் தேவையை அவரால் பூர்த்தி செய்திருக்க முடியும்.

ஆனால், நேர்மையின் அடையாளமாக விளங்கிய கிளாரா, அந்த தங்கச் சங்கிலியை போலீசிடம் கொண்டு போய் ஒப்படைத்தார். அவரது நேர்மையான செயலை கேள்விப்பட்டவுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்பத்துடன் கிளாராவை வரவழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், இங்கிலாந்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பி வந்ததும், தங்களை அழைத்து பாராட்டுவார் என்றும் கூறினார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தூய்மைப் பணியாளர் கிளாராவை அழைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story