திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி பலி

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றார்.
விபத்து, பலி.
Published on

திருநெல்வேலி,

திருச்செந்தூருக்கு நடைபயணம் சென்றபோது, உவரி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த பக்தர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள பூவியூர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மனைவி வசந்தா (வயது 60). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் சிதம்பரம் இறந்துவிட்டதால், வசந்தா தனியாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருச்செந்தூருக்கு சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி பலி

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வசந்தா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூருக்கு நடைபயணம் புறப்பட்டுச் சென்றனர். வசந்தா, இளந்தேரிவிளையைச் சேர்ந்த செந்தில்(43) என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் 2 பேரும் நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்த உவரி அருகே உள்ள காரிக்கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் திருச்செந்தூரை நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வசந்தா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாதயாத்திரை பக்தர்களிடையே சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உவரி போலீசார் வசந்தாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். நடைபயணம் சென்ற பெண் பக்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பாதயாத்திரை பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com