வழிப்பறி வழக்கில் கைதானவரிடம் பறிமுதல் செய்ததில் கையாடல்.. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்

கையாடல் செய்த ராமநத்தம் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள் (வயது 60). இவர் சம்பவத்தன்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு செல்வதற்காக கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் மாவட்டம் கீழபுலியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் லிப்ட் கொடுத்து அம்மணிம்மாளை மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்று அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகைபறித்த பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டு வராமல் இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரூ.75 ஆயிரம் கையாடல் செய்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு இட மாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
வழிப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை கையாடல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குள்ளஞ்சாவடி பகுதியில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து அவர் அங்கிருந்து ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






