பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜரானார். சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்
Published on

விழுப்புரம்,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகினார். சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் வீரமணி ஆஜராகி சிறப்பு டி.ஜி.பி. ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தார். மேலும் இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது, எனவே இவ்வழக்கை இங்கு விசாரிக்கக்கூடாது என்று வக்கீல் வீரமணி ஆட்சேபனை செய்தார். இதை கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கை விசாரிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு முகாந்திரம் இல்லை என்றால் அதற்கான உரிய ஆவணங்களை சமர்பிக்கும்படி உத்தரவிட்டார்.

விசாரணை ஒத்திவைப்பு

அதன்பின்னர் செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு, இவ்வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை கேட்டும், தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் ஏற்கனவே தாக்கல் செய்த 2 மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சார்பில் ஆஜரான வக்கீல் வெங்கடேசன், இவ்வழக்கிற்கும், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எனவே வழக்கில் இருந்து அவரை விடுவிக்கக்கோரி வாதம் செய்தார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வைத்தியநாதன், கடும் ஆட்சேபனை செய்ததோடு இவ்வழக்கிற்கும், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கும் சம்பந்தம் இருப்பதாக வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com