

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜர் ஆகாததால் இவ்வழக்கின் விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு (திங்கட்கிழமைக்கு) நீதிபதி புஷ்பராணி ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அப்போதைய திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், அப்போதைய பெரம்பலூர் போலீஸ்காரர் டேவிட் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.