

ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் சிங்காரா வனச்சரகத்தில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையின் இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும், விலை உயர்ந்த மரங்களும் உள்ளதால் வனத்துறையினர் தினந்தோறும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதியான சிங்காரா வனச்சரகத்தில், நார்தன்ஹே காப்புக்காட்டிற்கு உட்பட்ட கிரிட் ஓடை பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபாசங்கர் உத்தரவின்பேரில், மசினகுடி கோட்ட துணை இயக்குநர் வித்யாதர் தலைமையில் சிங்காரா வனச்சரகர் விமல்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சிறுத்தையின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், முதற்கட்ட ஆய்வில் இறப்புக்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை.
இதையடுத்து, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டு நடைமுறைகளின்படி, இறந்துகிடந்த சுமார் 10 வயதுடைய பெண் சிறுத்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், சிறுத்தையின் இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் வகையில் உடல் பாகங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இறந்த சிறுத்தையின் பின்னங்கால்கள் செயலிழந்தது போன்ற நிலையில் இருந்ததாகவும், அவற்றின் வளர்ச்சி போதிய அளவில் இல்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
வயது மூப்பு காரணமாகச் சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை மற்றும் உடல் பாகங்களின் ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உரிய நடைமுறைகளின்படி சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.