

திருப்பூர்,
சென்னை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து இந்த 3 மாவட்டங்களில் 5 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வருங்கால வைப்புநிதி அலுவலக அமலாக்க பிரிவு ஆய்வாளர் ஜி.லோகநாயகி அறையில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
இதுகுறித்து ஆய்வாளர் லோகநாயகியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சென்னையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு திருப்பூரில் கிளை அலுவலகம் இயங்கி வருவதாகவும், அந்த கிளையில் பணியாற்றிய ஊழியருக்கு பணிப்பலன் தொகை வழங்குவது தொடர்பான விஷயத்தில் இந்த பணத்தை லஞ்சமாக கொடுத்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து வருங்கால வைப்புநிதி அலுவலக ஆய்வாளர் லோகநாயகியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், பெண் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக திருப்பூர் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் ஆகிய 2 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.6.10 லட்சம் பறிமுதல்
கைது செய்யப்பட்ட பெண் அதிகாரியின் அலுவலகம் மற்றும் வளாகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. அதேபோல, மற்றோரு அதிகாரியின் அறையில் இருந்து சுமார் ரூ.3 லட்சம் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆய்வாளர் லோகநாயகி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் ஆகியோரை கோவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.