வடமாநில பெண் அதிகாரி குத்திக்கொலை: உடன் வசித்த வாலிபர் ஓட்டம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரியாக அபர்ணா பணியாற்றி வந்தார்.
வடமாநில பெண் அதிகாரி குத்திக்கொலை: உடன் வசித்த வாலிபர் ஓட்டம்
Published on

ராமநாதபுரம்,

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள செய்ன்புரா பகுதியைச் சேர்ந்த சியாம் சுந்தர்லால் என்பவரின் மகள் அபர்ணா (வயது 38). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ராமநாதபுரம் போக்குவரத்து நகர் வாமகார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் அங்குள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் பீகார் சென்றிருந்த அவர் கடந்த மாதம் 21-ந் தேதி மீண்டும் ராமநாதபுரம் வந்தார். தனது வளர்ப்பு நாயையும், உதவிக்காக உறவினரான ரித்திக் (27) என்பவரையும் அழைத்து வந்திருந்தார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அபர்ணாவிடமிருந்து எந்த அழைப்பும் வராததால், அவரது குடும்பத்தினர் சந்தேகமடைந்து ரித்திக்கை தொடர்பு கொண்டனர். அவர், அபர்ணா சென்னை சென்றதாகவும், தான் பாட்னாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அவரது செல்போனிலிருந்து அபர்ணா இறந்த நிலையில் கிடக்கும் படம் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார், பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது. அபர்ணா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்தது.

இதனால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அருகில் அவரது நாயும் கொல்லப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக தலைமறைவான ரித்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் அபர்ணா எப்படி கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும் என போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com