பட்டியலின பெண் ஊராட்சித் தலைவர் அமிர்தம், போலீஸ் பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

திருவள்ளூர் ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமிர்தம் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பட்டியலின பெண் ஊராட்சித் தலைவர் அமிர்தம், போலீஸ் பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்றது முதல் கிராம பஞ்சாயத்து செயலாளர் சசிகுமார் என்பவர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் ஆவணங்களை முறையாக சமர்ப்பிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊராட்சி துணை தலைவரின் கணவர் விஜயகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் ஹரிதாஸ் ஆகியோர் அமிர்தத்திற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக சுதந்திர தினத்தன்று கொடியேறுவதற்காக அமிர்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் மூவரும் தலையிட்டு அவரை கொடியேற்ற விடாமல் தடுத்துள்ளனர்.

இது தவிர ஊராட்சித் தலைவர் நாற்காலியில் அமரவிடாமல் தடுத்தது, அமிர்தத்தை அவரது சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பது உள்ளிட்ட செயல்களிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அமிர்தம் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் சசிகுமார், ஹரிதாஸ் மற்றும் விஜயகுமார் ஆகிய மூவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுவிட்டனர். இருப்பினும் அவர்கள் வெளியே வந்த பிறகு தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டு அமிர்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2014 வரை பட்டியலின பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பல ஊராட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தனக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அமிர்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், 2 வாரங்களில் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com