பாலக்காடு ரெயிலில் படுக்கை விழுந்து பெண் பயணி படுகாயம்: தெற்கு ரெயில்வே விளக்கம்

பெண் பயணி மீது ரெயில் படுக்கை விழுந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
பாலக்காடு ரெயிலில் படுக்கை விழுந்து பெண் பயணி படுகாயம்: தெற்கு ரெயில்வே விளக்கம்
Published on

சென்னை,

சென்னை முகலிவாக்கம், குமாரசாமி தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). இவர், சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ஜோதி தனது மனைவி சூர்யா (39) மற்றும் தனது 14 வயது மகனுடன் சென்னை சென்டிரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் நேற்று முன்தினம் பயணம் செய்தார்.

அப்போது சூர்யா, படுக்கை வசதி பெட்டியின் கீழ் இருக்கையில் தூங்கினார். ரெயில் இரவு 1.30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வந்தபோது, சூர்யாவிற்கு மேலே உள்ள நடுப் படுக்கையில் தூங்கி கொண்டிருந்தவர் கீழே இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சங்கிலி கழன்றுவிட்டதால் நடுப் படுக்கை கீழே படுத்திருந்த சூர்யா மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சூர்யா வலியால் அலறி துடித்தார்.

உடனே சூர்யாவின் கணவர் பெட்டியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகரை அழைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், ரெயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி இல்லாததால் சூர்யாவிற்கு எந்தவித சிகிச்சையையும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, ரெயில்வே அதிகாரிகளிடம், இத்தனை பேர் பயணம் செய்யும் ரெயிலில் ஒரு முதலுதவி சிகிச்சை பெட்டி கூட இல்லையா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து, மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கும்படி ரெயில்வே அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால், ரெயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் நாங்கள் எப்படி ஆஸ்பத்திரி செல்வோம் என கூறி சூர்யா ரெயிலில் இருந்து இறங்க மறுத்துவிட்டார்.

பின்னர், சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கிய சூர்யா ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் சூர்யா வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது ரெயில் படுக்கை விழுந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து பாலக்காடு நோக்கி நேற்று எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. எஸ்-5 பெட்டியில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்த பின்னர் பெண் பயணியின் இருக்கைக்கு மேல் இருந்த நடுப்பகுதி இருக்கை விழுந்ததில் பெண் பயணி காயம் அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மொரப்பூர் ரெயில் நிலையத்தில் அந்த பயணி இறங்க மறுப்பு தெரிவித்தார். பின்னர், சேலம் ரெயில் நிலையத்தில் இறக்கி, பெண் பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதையடுத்து, சம்பவம் நடந்த பெட்டியில் இருக்கை அமைப்புகளை ரெயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பெட்டியில் மெக்கானிக்கல் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை. பயணிகள் நடுவில் உள்ள படுக்கை வசதியிலான இருக்கையின் சங்கிலியை இணைக்கும் கொக்கியை முறையற்ற முறையில் கையாண்டதாலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com