

சென்னை,
கோவையில் 45 வயதான பெண் காவலரை அலுவலக அறையில் வைத்து உயர் அதிகாரி ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டண்ட் பிரிவில் எஸ்.பி அந்தஸ்தில் செந்தில் குமார் என்ற அதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக உதவி ஆய்வாளர் புஷ்பா குமாரி என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் கடத்தல், பாலியல் வன்கொடுமை என 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலரை கடந்த அக்டோபர் மாதம் அலுவலகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்த சம்பவத்திற்கு உதவி ஆய்வாளர் ஒருவரும் அதிகாரிக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெண் காவலரிடம் எஸ்.பி தவறாக நடக்க முயன்ற போது, அவர் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு சென்றதாகவும், அதன்பிறகு உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்டு அவர் மூலமாக பெண் காவலரை மீண்டும் அலுலக அறைக்கு வரசொல்லி பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. உதவி ஆய்வாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் காவலர் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்று கூறியும், உதவி ஆய்வாளர் அந்த பெண் காவலரை கமாண்டண்ட் அலுவலத்தில் விட்டு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக செந்தில் குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பணியிடை நீக்கமும் செய்யபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் காவலர் ஏற்கனவே, விசாகா கமிட்டி மற்றும் உள்விசாரணைக்குழுவிடமும் புகாரளித்து இருந்ததாகவும் அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோயம்புத்தூர் மாவட்டம் கோவை புதூரில் உள்ள, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அதிகாரி செந்தில்குமார், பெண்காவலரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதால், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகம் முழுவதும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலில், பெண் காவலரே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்போதும், காவல்துறை அதிகாரியே இதனைச் செய்திருப்பதும், திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை அவலநிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை.
பெண் காவலருக்கு, காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்? என அதில் பதிவிட்டுள்ளார்.