

சென்னை,
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் போலீஸ்காரர் சிலம்பரசன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவரும் காவலராக பணி புரிந்து வருகிறார். 29 வயதான புவனேஸ்வரி கடந்த 2016-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆவடி பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வரும் புவனேஸ்வரி அயல் பணியாக எழும்பூர் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு சிலம்பரசனும் புவனேஸ்வரியும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகுதான். நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.
திருமணமான நாளில் இருந்தே சிலம்பரசன் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அவர் அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
'இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த சிலம்பரசன் தன் மனைவி புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் தான் பெண் காவலர் புவனேஸ்வரி நேற்று இரவு போலீஸ் குடியிருப்பில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் எழும்பூர் போலீசார் விரைந்து சென்று புவனேஷ்வரியின் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு அரசு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான நாள் முதலே புவனேஸ் வரியின் கணவர் சிலம்பரசன் சந்தேகப்பட்டு அடித்து கொடுமைபடுத்தி வந்ததாக புவனேஸ்வரியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் காவலர் புவனேஸ்வரிக்கும் காவலர் சிலம்பரசனுக்கும் ஏற்கனவே குடும்பத்தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று இரவு சிலம்பரசன் புவனேஸ்வ ரியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து உள்ளார். எனது சொந்த ஊரில் இடம் வாங்க வேண்டியுள்ளது உனது பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு வாங்கி கொடு என கூறியிருக்கிறார் இதன் காரணமாகவே இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் பெண் போலீஸ் புவனேஸ்வரி மர்மமான முறை யில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக எழும்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பெண் காவலர் புவனேஸ்வரியை அவரது கணவரான காவலர் சிலம்பரசன்தான் அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டிருப்பதாக பெண் போலீசின் உறவினர்கள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான நாள் முதலே புவனேஸ்வரி மீது காவலர் சிலம்பரசன் சந்தேக த்தில் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாகவும் பெற்றோரிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் புவனேஸ்வரியின் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே பெண் காவலர் புவனேஸ்வரி உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பவர் உள்ளாடை அணிந்து கொண்டு ஏன் தற்கொலை செய்ய வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இது தொடர்பாகவும் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காவலர் சிலம்பரசன், பெண் காவலர் புவனேஸ்வரியை சித்ரவதை எதுவும் செய்து தூக்கில் தொங்க விட்டாரா? இல்லை கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் போன்ற கேள்விகளுக்கு பிரேத பரிசோதனை முடிவில் தான் விடை கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பெண் போலீசார் கண்ணீர்
எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரியின் தோழிகளான காவலர்களும் இன்று கண்ணீர் மல்க காட்சி அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் புவனேஸ்வரியின் குடும்பத்தினரிடம் கூறும்போது, எங்களோடு ஒன்றாக பணியாற்றிய புவனேஸ்வரி இன்று இல்லை என்று நினைக்கும் போது, பைத்தியம் பிடித்தது போல் உள்ளது. யார் கவலையில் இருந்தாலும் ஆறுதல் சொல்லும் புவனேஸ்வரி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை எனக் கூறி அவர்களும் கதறி அழுதார்கள்.