சாலையில் கிடந்த 45 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர்

நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 45 பவுன் நகையை தொலைத்து விட்டதாக புகார் அளித்து இருந்தார்.
சாலையில் கிடந்த 45 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர்
Published on

சென்னை,

சென்னை தியாகராய நகர் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் நேற்று சென்னை மாநகராட்சி பெண் தூய்மைப்பணியாளர் பத்மா என்பவர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று சுற்றி வைக்கப்பட்டிருப்பதை கண்டார். அதை பிரித்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் பிளாஸ்டிக் கவரை பிரித்து நகைகளை சோதனை செய்தபோது அவை சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏற்கனவே பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் சுமார் 45 பவுன் நகையை தொலைத்து விட்டதாக புகார் அளித்து சென்றது தெரியவந்தது.

பின்னர், புகார்தாரரான ரமேசை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர் பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று மாலை தியாகராய நகர் சென்றபோது தன் கையில் வைத்திருந்த நகைப்பையை அருகில் இருந்த தள்ளுவண்டி கடையின் மீது வைத்து விட்டு அங்கிருந்து மறந்துச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

நகை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு பணியை போலீசார் மேற்கொண்டு ரமேஷிடம் நகைகளை ஒப்படைத்தனர். சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகையை கண்டெடுத்து, அதனை நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com