பெண் தாசில்தார், பொதுப்பணித்துறை ஊழியருக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய பெண் தாசில்தார், பொதுப்பணித்துறை ஊழியருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெண் தாசில்தார், பொதுப்பணித்துறை ஊழியருக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அன்பரசன், பாலகிருஷ்ணன், கவிதா ஆகியோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக கூறி செங்கல்பட்டு தாசில்தார், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் ஆகியோர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீசை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நோட்டீசுக்கான காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே வீட்டை இடித்துவிட்டதாக அன்பரசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடப்பது மக்கள் ஆட்சியா?

இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகி இருந்த தாசில்தார் பாக்கியலட்சுமி, வீட்டை இடிப்பதற்காக பொக்லைனுடன் சென்றிருந்த பொதுப்பணித்துறை ஊழியர் பிரஸ்னேவ் ஆகியோரிடம், நீங்கள் பொது ஊழியர்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகிறீர்கள். மனுதாரர்களுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு கால அவகாசம் இருக்கும் நிலையில் அவசர அவசரமாக அவர்களது வீட்டை இடித்தது ஏன்?. சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள உங்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?. அதிகாரிகள் சட்டத்துக்கு மேலானவர்களா?. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா?, காட்டு தர்பாரா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் கூட சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

வீட்டை இழந்தவரை உங்களது (தாசில்தாரை பார்த்து) வீட்டில் தங்குவதற்கு உத்தரவிடலாமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, வீட்டை இடிக்க நான் உத்தரவிடவில்லை என்று தாசில்தார் கூறினார்.

ஆனால், தாசில்தார் தான் வீட்டை இடிக்க உத்தரவிட்டார் என்று பொதுப்பணித்துறை ஊழியர் பிரஸ்னேவ் திட்டவட்டமாக கூறினார்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பெண் தாசில்தாரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்போவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இதன்பின்னர் நீதிபதிகள், இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்போவதாக கூறினர். அப்போது அவர்கள் இருவரும் மன்னிப்பு கோரி நீதிபதிகளிடம் கெஞ்சினர்.

இதைத்தொடர்ந்து, இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த தொகையை வீட்டை இழந்த மனுதாரர் அன்பரசனுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இடிக்கப்பட்ட வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட பொருட்களை ஒப்படைக்கவும், மின் இணைப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை வருகிற 22-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com