

நீலகிரி,
பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட எடக்காடு நடுஹட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவருடைய தந்தை பெயரில் உள்ள 3½ சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்டாக வாங்கிய இவர் பட்டா மாற்றத்திற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இது தொடர்பாக பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை (29 வயது) தொடர்பு கொண்டார்.
அப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய தனக்கு ரூ.1½ லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு தொகை தர முடியாது என்று வசந்த் கூறியுள்ளார். கடைசியில் ரூ.1¼ லட்சம் லஞ்சமாக தந்தால் பணியை முடித்து கொடுப்பதாக உமா பிரியா கூறியுள்ளார்.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத வசந்த் இதுகுறித்து நீலகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், உமா பிரியாவை கையும், களவுமாக பிடிக்க ரசாயனம் தடவிய பணத்தை, வசந்திடம் கொடுத்தனர்.
இந்த நிலையில் நியூ அட்டுபாயில் என்ற இடத்தில் கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா பணி நிமித்தமாக இருந்ததால், அந்த பணத்தை மஞ்சூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுக்குமாறு வசந்திடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வசந்த் பணத்தை தனியார் வங்கி ஊழியரிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப் புத்துறை போலீசார் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை கைது செய்தனர்.