மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகள் தீவிரம்

ஆலங்குளம் பகுதிகளில் மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகள் தீவிரம்
Published on

ஆலங்குளம் அருகே உள்ள அப்பயநாயக்கர்பட்டி, மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, வலையபட்டி, பெத்லேகம், கண்மாய்பட்டி, கொங்கன்குளம், தொம்பகுளம். ரெட்டியபட்டி, கீழராஜகுலராமன், நல்லக்கம்மாள்புரம், கல்லமநாய்க்கர்பட்டி. எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, குண்டாயிர்ப்பு, புளியடிபட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோள பயிர்களானது தண்ணீர் இன்றி கருகும் நிலையில் இருந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.இந்தநிலையில் தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் பயிர்களை காப்பாற்ற மக்காச்சோளத்திற்கு யூரியா, பொட்டாஷ் உரமிடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளனர். போதிய தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் இந்த பயிர்கள் கருக ஆரம்பித்து விட்டன.இதனால் விவசாயிகள் கடும் வேதனையுடன் இருந்தனர். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என விவசாயிகள் கவலையில் இருந்தனர். தற்போது ஆலங்குளம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்காச்சோள பயிர்களை காப்பாற்ற உரமிடும் பணிகள் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தாடர்ந்து மழை பெய்தால் பயிர்களை கண்டிப்பாக காப்பாற்றி விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com