அடுத்த 4 மாதங்கள் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்ன? - மண்டல இணை கமிஷனர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை கடிதம்

அடுத்த 4 மாதங்கள் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்ன? என்பது குறித்து தகவல் பெற்று அனுப்புமாறு, மண்டல இணை கமிஷனர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அடுத்த 4 மாதங்கள் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்ன? - மண்டல இணை கமிஷனர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை கடிதம்
Published on

சென்னை,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில்களும் மூடப்பட்டன. இதனால் பங்குனி, சித்திரை, ஆடி மாத திருவிழாக்கள் கோவில்களில் விமரிசையாக நடத்தப்படவில்லை. சில கோவில்களில் மட்டும் வழிபாடுகள் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டன.

கோவில்களில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று ஆன்மிகவாதிகள், இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நோய் தொற்று குறைவாக உள்ள இடங்களில் சிறிய மற்றும் வருவாய் குறைந்த கோவில்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதித்தது.

இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் சார்பில் இணை கமிஷனர் மங்கையர்கரசி, அனைத்து மண்டல இணை கமிஷனர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், வருகிற செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் (தற்போது தொடங்கியுள்ள ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி) மாதங்களில் நடக்கும் முக்கிய திருவிழாக்கள் தொடர்பான விவரங்கள், திருவிழாவின் பெயர், மாதம், தேதி உள்ளிட்ட தகவல்களை உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி, பெருமாள் கோவில்களில் சனிக்கிழமைகள்தோறும் நடைபெறும் வழிபாடு, கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபத்திருவிழா, அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்தல், சோமவார வழிபாடு, மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி, சிவன் கோவில்களில் மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம் மற்றும் திருப்பாவை, திருவெம்பாவை அதிகாலை வழிபாடு உள்ளிட்ட விழாக்கள் நடப்பது வழக்கம். இந்த விழாக்கள் தொடர்பான விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை, அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அதன் பின்னர் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com