இரு யானைகளுக்கிடையே பயங்கர சண்டை: ஒரு யானை உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
இரு யானைகளுக்கிடையே பயங்கர சண்டை: ஒரு யானை உயிரிழப்பு
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்டது மாமரத்துப்பள்ளம். இங்கு வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று காலை வனத்துறையினர் அங்கு சென்றனர்.

சம்பவ இடத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்த நிலையில் கிடந்தது. அதன் தலை பகுதியில் காயங்கள் இருந்தன. தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அதில் 2 யானைகளுக்கு இடையே பயங்கர சண்டை நடந்ததும், அதில் இந்த யானையை மற்றொரு யானை தந்தத்தால் சரமாரியாக குத்தியதில் இறந்ததும் தெரிய வந்தது. பிரேத பரிசோதனையை தொடர்ந்து இறந்த யானையின் உடலில் இருந்த 2 தந்தங்களும் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து வனத்துறை அலுவலர்கள் கூறும் போது, 'ஆண் யானை இறந்த தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினோம். தலையில் இருக்கும் காயங்களை வைத்து அந்த யானை அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகித்தோம். உடற்கூராய்வு அறிக்கையில் இறந்து போன யானைக்கும், மற்றொரு யானைக்கும் சண்டை நடந்ததும், அதில் அந்த யானை தந்தத்தால் குத்தியதில் இந்த ஆண் யானை இறந்ததும் தெரிய வந்துள்ளது' என்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com