6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
Published on

சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன. தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த 37 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5-ந் தேதியாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9-ந் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் மார்ச் 16-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பிக்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும்.

வாக்குப்பதிவு இருந்தால், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை குழுக்கள் அறையில் மார்ச் 16-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலுக்காக, தமிழ்நாடு சட்டசபை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தியை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், செயலாளர் தேன்மொழியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

வேட்பு மனுக்களை உரிய ஆவணங்களுடன், தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்னை தலைமைச்செயலக அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 5-ந் தேதிவரை தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ந் தேதி தவிர பிற நாட்களில்) தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கலாம் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com