தேர்வாணையம் மூலம் உடனே காலி பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

போதிய ஆசிரியர்கள், நிரந்தர முதல்வர்கள், தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கேள்விக்குறியாக்கும்

தமிழ்நாட்டில் இயங்கும் அரசு கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையை 20% உயர்த்திட அரசாணை வழங்கப்பட்டிருப்பது ஒருபுறம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதேசமயம் அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படமால் இருப்பது மாணவர்களின் கல்வி தரத்தினை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றல் திறனையும் பாதிக்கும்

ஏற்கனவே சுமார் 9,000 உதவி பேராசிரியர் பணியிடங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் பல கல்லூரிகள் போதிய விரிவுரையாளர்கள் இன்றி இரண்டு ஷிப்ட்களாக இயங்கி வரும் நிலையில், மாணவர் எண்ணிக்கையை இன்னும் அதிகரிப்பது, பணியாற்றும் விரிவுரையாளர்களின் பணிச்சுமையையும், மாணவர்களின் கற்றல் திறனையும் கடுமையாக பாதிக்கும்.

அடிப்படை வசதிகள்

எனவே மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்துவது மட்டும் உயர்கல்வி வளர்ச்சி அல்ல என்பதை உணர்ந்து தரமான கற்பித்தல், போதிய ஆசிரியர்கள், நிரந்தர முதல்வர்கள், தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்பி, தரமான உயர்கல்வியை மாணவர்களுக்கு வழங்க தமிழக உயர்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com