

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் அவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறையின் முன்னேற்றத்திற்காகவும், சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் எப்போதும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்தவர் ராஜன் அவர்கள். திரைப்பணியோடு கல்விப் பணியும் ஆற்றியவர். தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழிலேயே தலைப்பு வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.
தனிப்பட்ட முறையில் என்மீது மிகவும் அன்பு செலுத்திய ராஜன் அவர்கள், தனது பேச்சில் எப்போதும் திரைத்துறையின் அடித்தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தியே பேசுவார். அன்னாரை இழந்து வாடும் கலைத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமை கிடைக்கட்டும். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.