இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

இறுதி வாக்காளர் பட்டியல், ஆதார் இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று ஆலோசனை நடத்தினார். முடிவில், ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Published on

வரைவு வாக்காளர் பட்டியல்

1.1.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

அதன்படி, நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

நவம்பர் 9-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் விவரங்களை அளித்தல் போன்ற பணிகள் வாக்குச்சாவடி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டன.

கலெக்டர்களுடன் ஆலோசனை

தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாகவும், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணியை வாக்குச்சாவடி அலுவலர்கள் விரைவுபடுத்த கேட்டுக்கொண்டார்.

கூட்ட முடிவில் சத்யபிரதசாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

23 லட்சம் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய என 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 பேர் நேரிலும், சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

புதிதாக பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 65 லட்சம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்துள்ளனர். இது, 61.50 சதவீதம் ஆகும்.

அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 91.4 சதவீதம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குறைந்தபட்சமாக சென்னையில் 30 சதவீதம் பேர் ஆதாரை இணைத்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com