

திருப்பூர்
அனைவருக்கும் வீடு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளதாக மத்திய நிதி இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறினார்.
மத்திய மந்திரி ஆய்வு
மத்திய நிதி இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தலைமையில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் என்னும் அனைவருக்கும் வீடு திட்டம் அதிகளவில் செயல்படுத்த அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். தேசிய மற்றும் தனியார் வங்கிகள் இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவியும், கல்விக்கடன், வேளாண்மைத்துறையின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்குதல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்கள் தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் குறித்து மந்திரி ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்றுமதி ஊக்குவிப்பு
ஜவுளித்துறையில் பிரதான் மந்திரி மித்ரா திட்டத்தின் மூலம் ஏற்றுமதியில் பெரிய முதலீடுகளை செயல்படுத்தும் பிளக் அன்ட் பிளே வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல், மெகா ஜவுளிப்பூங்கா உருவாக்குவதல், ஜவுளித்தொழிலை உலக அளவில் போட்டி தன்மை அடைய செய்யவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் கயறு வாரியத்தின் மூலம் பயிற்சி வகுப்புகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திருப்பூரில் செயல்பட்டு வருகிறது. வருமானவரி மற்றும் சேவை வரி குறித்தும், நகராட்சி நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம் குறித்தும் ஆய்வு நடந்தது.
அனைவருக்கும் வீடு திட்டம்
கூட்டத்தில் மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி பேசியதாவது:-
மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடையும் வகையில் மத்திய, மாநில அரசுத்துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். பிரதான் மந்திரி அவாஸ் ஜோஜனா திட்டம் என்னும் அனைவருக்கும் வீடு திட்டத்தை அனைத்து மக்களுக்கும் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் இலக்கு நிர்ணயித்த குறியீடுகளையும் தாண்டி செயல்படுத்த மத்திய அரசு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. எனவே தேவையிருந்தால், மத்திய அரசுக்கு முன்மொழிவை அலுவலர்கள் அனுப்பினால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பங்கேற்றவர்கள்
இந்த கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மத்திய நிதி இணை மந்திரியின் தனி செயலாளர் அல்கேஷ் உட்டம், வருமான வரித்துறை துணை ஆணையாளர் பிரியாத்தி சர்மா, இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னச்சாமி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா, முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.