

சென்னை,
தினமலர் நாளிதழின் வேலூர், திருச்சி பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டதால், இந்த கோவில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், ஓதுவார்கள் உள்ளிட்டோர் வருமானத்தை இழந்துள்ளனர்.
கோவில்கள் மூலம் கிடைக் கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு உபரிநிதியாக வைக் கப்படும். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையிடம் ரூ.300 கோடி உள்ளது. இதில் இருந்து, இவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வீதம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை அளித்த பதில் மனுவில், மார்ச் 15-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரை அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் என்று 12 ஆயிரத்து 401 பேருக்கு தலா ரூ.1,000-ம், மே 16-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை தலா ரூ.1,500-ம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள சிறு கோவில்கள் எல்லாம் ஜூலை 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டு விட்டன. அதனால் மூடப்பட்டுள்ள கோவில்களை சேர்ந்த ஊழியர்கள் 6 ஆயிரத்து 664 பேருக்கு மட்டும் ஜூலை மாதம் தலா ரூ.1,000 வழங்கப்பட்டு உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கவுசிக் என்.சர்மா, தமிழகத்தில் சுமார் 21 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஒரு கோவிலுக்கு ஒருவர் என்றாலும் 21 ஆயிரம் ஊழியர்களுக்கு நிதியை அரசு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் வெறும் 6 ஆயிரத்து 664 பேருக்கு மட்டுமே நிதி வழங்கி உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை சார்பில் அரசு வக்கீல் ஆர்.வெங்கடேஷ் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தின் கீழ் வரும் கிராம பூசாரிகள் அறநிலையத்துறையின் கீழ் வரமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே நிதிஉதவி வழங்கப்பட்டு விட்டது.
மாதந்தோறும் ஊதியம் பெறுவோருக்கும் நிதியுதவி வழங்க தேவையில்லை என்று கடந்த 6-ந்தேதி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவின்படி, 6,664 வருமானம் இழந்த ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் பயனாளிகள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ளது என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனவே, கடந்த 6-ந்தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருமானம் இழந்துள்ள 6,664 ஊழியர்களுக்கு 6 வாரத்துக்குள் நிதியுதவி வழங்க வேண்டும். ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்பாக ஏதாவது கோரிக்கை இருந்தால் மனுதாரர் மீண்டும் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடரலாம். தற்போது இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.