

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துகடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த தனபால் (வயது-37), மேனகா (வயது-35) மற்றும் இவர்களது உறவினர்களான மேனகாவின் சகோதரியின் மகளான சினேகா (வயது-23), தனபாலின் மகளான கனிஷ்கா (வயது-17) மற்றும் தனபாலின் மகனான சுர்ஜித் (வயது-12) ஆகிய ஐந்து நபர்கள் காரில் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் என்பவர் சரக்கு லாரியை, பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த நிலையில், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தனபால், மேனகா, சினேகா மற்றும் கனிஷ்கா ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் சுர்ஜித் படுகாயமடைந்து முதலுதவி அளிக்கப்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுர்ஜித் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.