விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17.09.2025) பிற்பகல் சுமார் 01.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் அகதிகள் முகாம் பகுதியில் வசிக்கும் திருமதி.கௌரி (வயது 50) க/பெ.பாலசிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வெம்பக்கோட்டை வட்டம், கோமாளிப்பட்டியைச் சேர்ந்த திரு.காளிமுத்து (வயது 45), எழுவன்பச்சேரி பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 55), மேகலை (வயது 40), குமரேசன் (வயது 30), கண்டியாபுரம் அகதிகள் முகாம் பகுதியில் வசிக்கும் சிவரஞ்சனி (வயது 48) மற்றும் சிவகாசி வட்டம், மாரனேரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 40) ஆகிய ஆறு நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் ஐந்து நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com