நிதி நிறுவன மோசடி வழக்கு; நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடி வழக்கு; நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

சென்னை,

மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தி கூறியுள்ளனர். இதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி தரவில்லை என புகார் எழுந்தது. இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவன நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மக்களின் பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே பணத்தை மீட்க வாய்ப்புள்ளது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com