பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை

பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை கைதான மேலாளர்கள் சிறையில் அடைப்பு.
பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை
Published on

பூந்தமல்லி,

சென்னை தி.நகரில் உள்ள பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில் கைதான அவரது மேலாளர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார்(வயது 43). இவர், சசிகுமார் நடத்தி வரும் கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார்.
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அசோக்குமார், கந்து வட்டி கொடுமையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் என கடிதம் எழுதி வைத்து இருந்தார்.

இதுகுறித்து நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் முன் ஜாமீன் கேட்டு அன்புசெழியன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நேற்று அந்த முன் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.

அன்புசெழியன் மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரது அலுவலகத்தில் சோதனை நடத்த அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கம் போலீசார் மனு அளித்து இருந்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதற்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் சென்னை தி.நகர், பாண்டிபஜார், ராகவையா ரோட்டில் உள்ள அன்புசெழியனின் அலுவலகத்தை திறந்து அங்கு ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? என தீவிரமாக சோதனை செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அன்புசெழியன் கடன் கொடுத்த போது அசோக்குமாரிடம் வெள்ளை தாள் மற்றும் தொகை நிரப்பப்படாத காசோலைகளில் கையெழுத்து வாங்கி வைத்து உள்ளார். மற்ற சினிமா தயாரிப்பாளர்களிடமும் இதே நடைமுறையைத்தான் அவர் கையாண்டு உள்ளார். தற்போது அன்புசெழியன் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அது சம்பந்தமான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? என்று தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அலுவலகத்தின் அனைத்து அறைகளும் பூட்டப்படாமல் திறந்தே இருந்தது. ஆனால் முன் எச்சரிக்கையாக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து சென்று வேறு இடத்தில் மறைத்து வைத்து விட்டனர். எங்கு தேடியும் அசோக்குமார் மட்டுமின்றி மற்ற தயாரிப்பாளர்கள் வாங்கிய கடன் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

அலுவலகத்தில் இருந்த ஒரு கம்ப்யூட்டரில் இருந்து ஹார்ட் டிஸ்க் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ஏதாவது தகவல்கள் கிடைக்குமா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்.

இன்று(வெள்ளிக்கிழமை) அந்த அலுவலகத்தை ஒட்டி உள்ள அன்புசெழியனின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்து உள்ளோம். வீட்டில் சோதனை செய்யும் போது அங்கு வேறு ஏதாவது ஆவணங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

தற்போது கிடைத்த தகவலின்படி அன்புசெழியன் பெங்களூருவில் இருந்து செல்போனில் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்று விட்டதால் அன்புசெழியன், போலீஸ் நிலையம் அல்லது கோர்ட்டில் சரண் அடையலாம் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையில் அன்புசெழியன் நடத்தி வரும் சினிமா பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர்களான முருககுமார் என்ற முருகசுந்தரம்(50), சாதிக்பாட்ஷா(49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். நேற்று போலீஸ் விசாரணை முடிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com