

சென்னை,
சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வாக இருப்பது மெட்ரோ ரெயில்கள் தான். விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் என முக்கிய பகுதிகளை இந்த மெட்ரோ ரெயில்கள் இணைக்கின்றன. இதனால் நாள்தோறும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
மெட்ரோ ரெயில்களில் பயணிகள் சிலர் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது, அலைபேசிகளில் பேசுவது சக பயணிகளுக்கு இடையூறு அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை மெட்ரோ நிர்வாகம் விடுத்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் வளாகத்திற்குள் சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படவோ கூடாது. அலைபேசியில் உரத்த குரலில் பேசுவது செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது; அலைபேசியில் மெட்ரோ ரெயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் ”என்று தெரிவித்துள்ளது.