

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவின்படி, தூத்துக்குடி நகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களைப் பயன்படுத்திய வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போக்குவரத்து போலீசார் தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களை இயக்கிய பள்ளி மாணவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வந்த வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். குறிப்பாக பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரும் இடையூறாக, விதிகளுக்குப் புறம்பாக அதிக இரைச்சல் மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தியிருந்த பைக்குகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்கள் அகற்றப்பட்டன. மேலும் விதிகளை மீறிய பள்ளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றும் இதர வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கடுமையான அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினர். விபத்துகளை குறைக்கவும், நகரின் அமைதியை பேணவும் இத்தகைய அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.