சிறுபான்மை மக்களிடம் கைரேகை, கண்ரேகை பதிவு: தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு அரசின் இத்தகைய சிறுபான்மை விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
Published on: 

சென்னை,

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் கைரேகை,கண்ரேகை பதிவு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.

கைரேகை மற்றும் கண்ரேகை

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைத் தொடர்ந்து,திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலும் சிறுபான்மை மக்களிடம் கைரேகை மற்றும் கண்ரேகைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மோசமான மனித உரிமை மீறலாகும்.

எந்தவொரு சட்டப்பூர்வமான காரணத்தையும் தெளிவுபடுத்தாமல், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிறுபான்மை மக்களிடம் இத்தகைய அடையாளப் பதிவுகளை மேற்கொள்வது அவர்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தும். இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

கண்டனம்

சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசின் இத்தகைய சிறுபான்மை விரோதப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எனவே,முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பூர்வமான காரணமின்றி மேற்கொள்ளப்படும் கைரேகை மற்றும் கண்ரேகைப் பதிவு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com