பனியன் நிறுவன தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆடைகள், எந்திரங்கள் நாசம்

திருப்பூர் புதுப்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆடைகள், எந்திரங்கள் எரிந்து நாசமானது.
பனியன் நிறுவன தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆடைகள், எந்திரங்கள் நாசம்
Published on

பின்னலாடை நிறுவனம்

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையத்தில் கண்ணன், நாராயணன் ஆகியோருக்கு சொந்தமான பின்னலாடை உற்பத்தி நிறுவனம் உள்ளது. இதன் அருகிலேயே பனியன் கழிவு குடோனும் அமைந்துள்ளது. நேற்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை. அனைவரும் அருகில் உள்ள தங்கும் குடியிருப்பில் இருந்தனர்.

இந்த நிலையில் பனியன் நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ள கழிவு குடானில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் எந்திரங்களுக்கும் பரவியது. இதனை பார்த்த ஊழியர்கள் ஓடிச் சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து ஊழியர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த நிறுவனத்திற்கு விரைந்து வந்தனர்.

ரூ.1 கோடி பொருட்கள் எரிந்து சேதம்

3 தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் 2 மணி நேரத்திற்கு மலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் மற்றும் எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்று நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக திருப்பூர்-காங்கயம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com