சேலம் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

கோழிப்பண்ணையில் கோழிகள் எதுவும் இல்லாததால் பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சேலம் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (47). விவசாயியான இவர் தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இதற்காக சுமார் 100 அடி நீளமும், 22 அடி அகலமும் கொண்ட தகர கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அடுத்த வாரம் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதற்காக நிலத்தை பதப்படுத்துதல், தேங்காய் நார் பரப்புதல் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகளையும் மேற்கொண்டிருந்தார். கோழிகளுக்கான கூண்டுகள் மற்றும் தீவன உபகரணங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோழிப்பண்ணையில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நடராஜனுக்கும், வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் தகர கொட்டகை முழுவதுமாக எரிந்து சேதமானது. மேலும் கோழி தீவனங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கோழிப்பண்ணையில் கோழிகள் எதுவும் இல்லாததால் பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com