கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து: உடல் கருகிய 2 பேர் பலி - ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் உடல் கருகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியானார்கள்.
கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து: உடல் கருகிய 2 பேர் பலி - ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் நேற்று முன்தினம் மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சிலிண்டர் வெடிக்க தொடங்கியதால் ஊழியர்கள் தீக்காயங்களுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ மளமளவென அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவத்தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குடோனில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் குடோனில் இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32), நிவேதா (21), தமிழரசன் (18), பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஆமோத்குமார்(25), ஜீவானந்தம், சண்முகபிரியன் ஆகிய 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தீக்காயம் அடைந்தவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் மற்றும் 21 வயது இளம்பெண் ஒருவர் என 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்த மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தேவரியம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் (54), சாந்தி (48), ஜீவானந்தம் (46), மோகன்ராஜ் (38) பொன்னிவளவன் (45) ஆகிய 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com