

மதுரை,
மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைப்பதற்கு மதுரை புறநகர் மற்றும் மதுரை மாநகரில் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் டன் கணக்கில் குப்பைகள் எரிந்து வருவதாலும், காற்றின் வீரியம் அதிகமாக இருப்பதாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து தீ எறிந்து வருகிறது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியிலயும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணிக்காக மதுரை, சிவகங்கையில் இருந்து 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு வாகனம் மட்டுமின்றி குடிநீர் எடுத்து வரும் லாரி மூலமாகவும் நீர் கொண்டுவரப்பட்டு, தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த குப்பை கிளையில் ஏற்பட்ட தீயினால் அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம், விமான நிலையம் செல்லக்கூடிய பகுதிகளில் புகை அதிகமாக பரவி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.