தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சேதம்

தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலைய சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி குவியலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலைய நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சேதமடைந்தது.

அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், நிலக்கரி குவியலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.

5 தீயணைப்பு வாகனங்கள்

அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அனல்மின் நிலைய பொறியாளர்களும், பணியாளர்களும் இணைந்து அருகிலிருந்த பிற நிலக்கரி குவியல்களுக்கும், மின் உற்பத்தி அமைப்புகளுக்கும் தீ பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ரூ.3 கோடி மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சேதம்

இருப்பினும் இந்த தொழில்நுட்ப விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் மின் உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அனல்மின் நிலைய நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com