புதுப்பேட்டையில் வாகன உதிரிபாகம் குடோனில் தீ விபத்து: வானை சூழ்ந்த கரும்புகை

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 மெட்ரோ வாட்டர் லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
புதுப்பேட்டையில் வாகன உதிரிபாகம் குடோனில் தீ விபத்து:  வானை சூழ்ந்த கரும்புகை.
தீ விபத்து
Published on: 

சென்னை,

சென்னை புதுப்பேட்டையில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயால், அப்பகுதி வானமே கரும்புகையாகக் காட்சியளித்தது.

திடீர் தீ விபத்து

புதுப்பேட்டை வெங்கடாசல நாயக்கர் தெருவில் உள்ள வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில், இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 8:30 மணியளவில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் தீ குடோன் முழுவதும் மளமளவென பரவி எரியத் தொடங்கியது. பிளாஸ்டிக் மற்றும் ஆயில் போன்ற பொருட்கள் எரிந்ததால், அந்த பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.

தீயணைப்பு படை விரைவு

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 மெட்ரோ வாட்டர் லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறுகலான தெருவாக இருந்தபோதிலும், சுமார் 30 நிமிடங்கள் வரை போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பாதிப்புகள்

தீ அருகில் இருந்த மற்ற கடைகளுக்கும் பரவியதால், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து கருகின. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதே குடோனில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் சதியா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com