

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாட்டு மருந்துக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், அங்கிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன், மந்திரிதோப்பு சாலைப் பகுதியில் 'ஆயுஷ்' என்ற பெயரில் நாட்டு மருந்து கடை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நாட்டு மருந்து கடையை அடைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அன்று நள்ளிரவில் அக்கடையின் உள்ளிருந்து திடீரென புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ விபத்து காரணமாக கடையில் இருந்த நாட்டு மருந்துகள் மற்றும் பூஜை பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.