

சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத ஒரு அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் நேற்று மதியம் திடீரென கரும்புகையுடன் தீ மளமளவென எரிந்தது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடினர். மேலும், அண்ணாசாலையில் சென்ற வாகன ஒட்டிகளும் இந்த தீ விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிடத்தில் எரிந்த தீ மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் தரைத்தளம் அருகே தேங்கிக்கிடந்த குப்பையில் தீ பற்றியதே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சமூக விரோதிகளின் கைவரிசையா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.