

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே புறவழிச் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் புறவழிச் சாலையில் டேவிட்ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனின் பின்புறத்தில் பைபர் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு சாமான்கள் மற்றும் வாகன டயர்கள் ஆகியவை பெருமளவில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே தீ வேகமாக பரவி, அப்பகுதி முழுவதையும் அடர்ந்த கருப்புப் புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த தீ விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் இணைந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. இச்சம்பவம் குறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.