கற்பூரத்தில் ஏற்றிய தீ சேலையில் பரவி மூதாட்டி உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரத்தில் ஏற்றிய தீ மூதாட்டியின் சேலையில் பிடித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை புழலை அடுத்த காவங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் செண்பகவள்ளி (68 வயது). இவரது மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் வசித்து வருகின்றனர். செண்பகவள்ளி மட்டும் தனியாக வசித்து வந்தார். தாய் வீட்டில் தனியே வசிப்பதால், அவரை கவனித்துக்கொள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராவை மகன் பொருத்தி இருந்தார். மேலும், அடிக்கடி வீடியோ காலில் தாயிடம் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில், துபாயில் உள்ள செண்பகவள்ளியில் மகன், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை செல்போன் வழியாக கண்காணித்தபோது, தாய் வீட்டில் புகைமூட்டமாக தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார்.

அவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, செண்பகவள்ளி தீக்காயங்களுடன் விழுந்து கிடந்தார். பூஜை அறையில் கற்பூரத்தில் ஏற்றிய தீ, அவருடைய சேலையில் பிடித்து, அதன் மூலம் தீக்காயம் அடைந்து மயங்கி கிடந்துள்ளார்.

உடனடியாக, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூதாட்டி மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள புழல் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com