கிண்டி - பரங்கி மலை ரெயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அவ்வழியே செல்லும் மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
கிண்டி - பரங்கி மலை ரெயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரெயில் சேவை பாதிப்பு
Published on

சென்னை,

சென்னை தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் கிண்டி ரெயில் நிலையம் வழியாக பயணிக்கின்றன. இந்த நிலையில் பரங்கிமலையிலிருந்து கிண்டி ரெயில் நிலையம் செல்லும் ரெயில்வே பாதையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ரெயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள ட்ரான்ஸ் பார்மர் ஒன்றின் கீழ் வளர்ந்திருந்த காய்ந்த புற்கள் எரிந்து கொண்டிருந்தது.

டிரான்ஸ்ஃபார்மரில் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தீயணைப்புத் துறையினர் வருவதற்கு தாமதமானதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது ரெயில் சேவை சீராகியுள்ளது. காய்ந்திருந்த புற்களை அகற்றாமல், உரிய பராமரிப்பின்றி இருந்ததே இந்த தீ விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com