பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

பழனி தீயணைப்பு நிலையம் சார்பில் பழனி முருகன் கோவிலில் பணியாற்றும் பணியாளர்கள், ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
Published on

பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோவிலில் ஏராளமான இடங்களில் தீத்தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அங்கு வேலை செய்யும் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்களுக்கு அவ்வப்போது தீத்தடுப்பு, விபத்து தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பழனி தீயணைப்பு நிலையம் சார்பில் பழனி முருகன் கோவிலில் பணியாற்றும் பணியாளர்கள், ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கி, தீத்தடுப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணி குறித்து பேசினார். அப்போது, அடுப்பை விட கியாஸ் சிலிண்டர் உயரமான இடத்தில் இருக்க வேண்டும். சமையலறையில் போதிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கியாஸ் கசிவு இருந்தால் மின்சார சுவிட்சுகளை அணைக்கவோ, ஆன் செய்யவோ கூடாது என்றார்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு படைவீரர்கள், கோவில் வெளிப்பிரகாரத்தில் வைத்து கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றினால் அதை தீயணைக்கும் கருவியை பயன்படுத்தி எப்படி அணைக்க வேண்டும் என்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர். இதில் பழனி கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com