

விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 பேர் உடல் கருகி பலியானார்கள். 7 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர வெடி விபத்து விருதுநகர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தநிலையில் சம்பவத்துக்கு காரணம் என்ன பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதில்,
வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் முத்துமாணிக்கம் (வயது 52). இவர் பட்டாசு ஆலையை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு விட்டதாக கூறப்படு கிறது. அனுமதிக்க வேண்டிய தொழிலாளர்களை விட கூடுதல் தொழிலாளர்கள் மூலம் உற்பத்தியில் ஈடுபட்டதும், வேதிவினை மாற்றத்தால் வேதிப்பொருள் வெடித்து 23 பேர் பரிதாப மாக இறந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வெடி விபத்து நடந்த கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் பட்டாசு உற்பத்தியில் அதிகளவில் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள னர். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகமாக பணிக்கு வந்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். தற்போது தேர்தல் காலம் என்பதால் சரவெடி தேவை அதிகரித்து உள்ளது. பெண்கள் வீடுகளில்கூட சரவெடிகளை தயாரித்து அனுப்பி வைப்பதாக புகார்கள் வருகின்றன. இந்தநிலையில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் சரவெடிகள்தான் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.