காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை - போலீசார் விசாரணை

மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வாலிபர் கோவைக்கு பணிக்காக திரும்பினார்.
காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

கோயம்புத்தூர்,

காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் அழகேசன் (25 வயது). கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தான் காதலித்து வந்த இளம்பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

வாடகை வீடு

பின்னர் தனது மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கோவைக்கு பணிக்காக திரும்பினார். மேலும் தனது மனைவியுடன் வசிக்க வாடகைக்கு வீடு பார்த்து வந்தார். கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. அந்த வீட்டில் அழகேசன் தங்கி இருந்தார். ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு சென்று மனைவியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்தார்.

செல்போன் சுவிட்ச்-ஆப்

இந்த நிலையில் நேற்று காலை அழகேசன் தங்கி இருந்த வீடு நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. அத்துடன் அழகேசனின் மனைவி அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவருடன் வேலை செய்து வரும் சக ஊழியர்கள் அந்த வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

போலீசார் விசாரணை

அப்போது மின்விசிறியில் அழகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர் தற்கொலை செய்ய குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com