பட்டாசு ஆலை விபத்து: சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து: சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்
Published on

விருதுநகர்,

விருதுநகர் தாலுகா, கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று விருதுநகர் மாவட்டம் அருகிலுள்ள கட்டனார்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து 23-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பை ஏற்படுத்திய செய்தி எனது மனதை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாதது என்பதை உணர்ந்தபடியே, இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமையும் ஆறுதலும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக அறிந்து, சிறந்த சிகிச்சை அளித்து விரைவில் முழுமையாக குணமடைய தேவையான அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.

இந்த போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்நேரத்தில் மிக அவசியமானதாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com