இந்திய அளவில் முதலிடம்: தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆண்களை விட சற்றே அதிகமாக உள்ளது.
ஸ்டார்ட் அப்
Published on

சென்னை,

தொழில் மற்றும் உள்புற வர்த்தக மேம்பாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15,037 ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஸ்டார்ட் அப்

சமீபத்திய தரவுகளின் படி, தமிழ்நாட்டில் பெண்கள் தொழில் முனைவோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7,572 ஆக பதிவாகியுள்ள நிலையில், ஆண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் 7,465 ஆக உள்ளன. இதன் மூலம், பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆண்களை விட சற்றே அதிகமாக இருப்பது பாலின சமத்துவத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.

மாநிலத்தின் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் சென்னை தொடர்ந்து முன்னணியில் உள்ளது. தலைநகரில் மட்டும் 5,134 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகும்.

சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,011 நிறுவனங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,318 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. மேலும், திருவள்ளூர் (916), செங்கல்பட்டு (815), மதுரை (497), திருச்சி (446), சேலம் (403) ஆகிய மாவட்டங்களும் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் அரசின் பல்வேறு திட்டங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புதுமை சார்ந்த சூழல் காரணமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com