

சென்னை,
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
நினைவிட திறப்புவிழா விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பகல் 12 மணி அளவில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேரில் சென்றார். நினைவிடம் அருகில் கட்டப்பட்டுள்ள கட்டுமானம், அறிவுசார் பூங்கா, பீனிக்ஸ் பறவையின் அமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் சுற்றி பார்வையிட்டார்.
எம்.ஜி.ஆர். நினைவிடம் சென்று அங்கு நடந்து முடிந்த சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
உடன் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் க.மணிவாசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.